ஒரு ஊசி, பல சந்தேகங்கள்... மரு. B.R.J. Kannan

ஒரு ஊசி, பல சந்தேகங்கள்…
மரு. B.R.J. Kannan

தடுப்பு ஊசி போடுவதைப் பற்றிப் பலரும் சந்தேகங்களைக் கேட்டவண்ணம் இருக்கின்றனர். சிலர் அந்த ஒரு காரணத்திற்காகவே பிரத்தியேகமாக மருத்துவமனைக்கு வந்து விடுகின்றனர். அவசியமில்லை. இதோ உங்கள் சந்தேகங்களும் அதற்கான விடைகளும்.

எனக்கு இளவயது தான். ஒரு நோய் நொடியும் இல்லை. நான் தடுப்பு ஊசி எடுத்துத்தான் ஆக வேண்டுமா?

ஆமாம்.

இந்த ஊசி போடும் பொழுது வலிக்குமா?

வலிக்காது. மிக மெல்லிய ஊசியைக் கொண்டு தான் மருந்தைச் செலுத்துகிறார்கள். நீங்கள் பயந்தால் அது வலியைப் பன்மடங்கு அதிகரிக்கும்.

எங்கள் வீட்டில் மூன்று பேர் இருக்கிறோம். எல்லோரும் ஒரே நாளில் போட்டுக் கொள்ளலாமா?

ஒருவர் மாறி ஒருவர் என்று மூன்று நான்கு நாட்கள் இடைவெளி கொடுப்பது நலம். காய்ச்சல், ஊசி போட்ட இடத்தில் வலி என்று வந்தால் அந்த நபருக்கு ஓய்வு குடுத்துவிட்டு மற்றவர்கள் வீட்டைக் கவனித்துக் கொள்ளலாம்.

தடுப்பூசி போட்ட பின் எவ்வாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

அப்படி எதுவும் இல்லை. சாதாரணமாக என்றும் போல் இருக்கலாம்.

கோவாக்ஸின் அல்லது கோவிஷீல்ட், எதைத் தேர்வு செய்யலாம்?

உங்கள் வீட்டுக்கு அருகில் எந்த ஊசி போடுகிறார்களோ, அதைப் போட்டுக் கொள்ளுங்கள். இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை.

எவ்வளவு நாட்கள் கழித்து இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்?

ஆறு முதல் எட்டு வாரங்கள் கழித்து.

நான் முன்னதாகவே, அதாவது ஒரு மாதத்திலேயே இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்டேன். அதனால் எனக்குப் பலன் குறைவாகக் கிடைத்திருக்குமா?

அப்படி எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அது உங்கள் உடம்பில் வேண்டிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கும் என்று நம்புங்கள்.

என்னை நாளை வரச் சொல்லியிருக்கிறார்கள். தற்சமயம் எனக்கு மாதவிடாய் காலம். ஊசி போடுவதைத் தள்ளிப் போட வேண்டுமா?

இல்லை. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நாளையே சென்று போட்டுக்கொள்ளுங்கள்.

தடுப்பூசி போடும் முன் சி.ஆர்.பி (CRP) என்னும் பரிசோதனை செய்யச் சொல்கிறார்களே?

அவசியமில்லை.

சிலர் நம் உடம்பில் கொரோனா நோய் எதிர்ப்புப் புரதங்கள் (ஆன்டிபாடிஸ்) உள்ளனவா என்று பரிசோதித்துவிட்டுப் பின்னர் தான் ஊசிபோடச் சொல்கிறார்களே?

தேவையற்றது.

என் கணவருக்குக் கொரோனா வந்தது, எனக்கு வரவில்லை. நான் இந்தக் கொரோனா எதிர்ப்புப்புரதங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்துப் பின்னர் தான் தடுப்பூசி போட வேண்டுமா?

இல்லை, நீங்கள் இப்பொழுதே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்

நான் கொரோனா வந்து மீண்டவன். நான்?

நீங்கள் இரண்டு மாதம் கழித்துப் போட்டுக்கொள்ளலாம்.

எனக்கு முதல் டோஸ் போட்டுக் கொண்டபின் கொரோனா வந்தது. நான் என்ன செய்ய வேண்டும்?

இரண்டு மாதங்கள் கழித்து இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ளுங்கள்.

இரண்டு டோஸும் போட்டுக்கொண்டேன் எனக்கு வேண்டிய அளவு நோய் எதிர்ப்புப் புரதங்கள் உருவாகி இருக்கின்றனவா என்று பரிசோதிக்க வேண்டுமா?

வேண்டாம். பணவிரயம். அந்தப் பரிசோதனையில் கொடுக்கப்படும் எண்ணிக்கை நம் நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டுவதாக நிறுவப்படவில்லை.

என் நண்பர் பரிசோதித்துக் கொண்டார். மிகவும் குறைவான அளவு என்று வந்திருக்கிறது. இதன் அர்த்தம் என்ன? தடுப்பூசி வேலை செய்யவில்லையா?

நம் உடல் இரண்டு முறைகளில் வைரசை எதிர்க்கிறது. ஒன்று, எதிர்ப்புப் புரதங்களை உருவாக்குவது. இரண்டாவது வைரஸிற்கு எதிராக வெள்ளை அணுக்களைத் தயார்செய்வது. முதல் முறையைத்தான் நம்மால் பரிசோதித்துக் கண்டறிய முடிகிறது. இரண்டாம் முறை எதிர்ப்புத் தன்மையைத் தற்சமயம் கண்டறிய வழியில்லை. உங்கள் நண்பருக்கு இந்த இரண்டாம் முறையில் வெள்ளை அணுக்கள் மூலமாக எதிர்ப்பு சக்தி அதிகமாகவும், புரதங்கள் குறைவாகவும் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

தடுப்பூசி போடுவதால் ரத்தக் குழாய்களில் ரத்தம் உறையும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்களே?

மிகவும் மிகைப்படுத்திப் பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையில்லை.

அதைத் தடுக்க முன் ஜாக்கிரதையாகச் சில மாத்திரைகளை முன்னும் பின்னும் எடுக்கச் சொல்கிறார்களே?

தேவையில்லை.

எனக்கு இதய நோய் இருக்கின்றது. ஸ்டென்ட் பொருத்தியிருக்கிறார்கள். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. நான் எடுத்துக்கொள்ளலாமா?

ஆமாம்.

நான் ப்ளட் தின்னர்ஸ் எனப்படும் மருந்துகளை (அஸ்பிரின், க்லோபிடோக்ரல்) எடுத்துக் கொண்டிருக்கிறேன் அவைகளை நிறுத்த வேண்டுமா?

தேவையில்லை.

நான் ரத்தம் உறைவதைத் தடுக்கும் வார்ஃபாரின் (Warfarin) / அஸிட்ரோம் மருந்தை எடுக்கிறேன். எனக்கு என்ன அறிவுரை?

நீங்கள் வழக்கமாகச் செய்யும் பி.டி/ஐ.என்.ஆர் எனும் பரிசொதனையைச் செய்யவும். அது எதிர்பார்க்கும் அளவில் (2.0 -3.0) இருந்தால், தயக்கமின்றித் தடுப்பூசியைப் போடவும். இல்லையென்றால், உங்கள் மருத்துவரை அணுகவும்.

நான் சிறுநீரகம்/ குடல் சம்பந்தமான மருந்துகளை எடுத்துக் கொண்டு வருகிறேன். நான் போட்டுக் கொள்ளலாமா?

ஆமாம்.

எனக்குப் புற்றுநோய் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

புற்றுநோய் சிகிச்சைகளை முழுவதுமாக முதலில் முடிக்கவும். அந்த மருந்துகளை நிறுத்தி இரண்டு வாரங்கள் கழித்துத் தடுப்பூசி போடவும். இதற்கு உங்கள் மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.

யாருக்குத் தடுப்பூசி போடக்கடாது?

வேறு ஒரு நோய்க்குத் தற்சமயம் சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில் அந்த நோயைக் குணப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அதில் இருந்து மீண்ட பின்னர்தான் தடுப்பூசியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடாமல், அந்த நோயும் வராமல் நான் தப்பிக்கும் வாய்ப்பே இல்லையா?

உண்டு. அதற்கு நீங்கள் போன பிறவியில் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். உங்களால் அதை உறுதியாகச் சொல்ல முடியாதென்றாலோ, உங்களுக்கு முற்பிறவி, அடுத்தப்பிறவி என்றெல்லாம் நம்பிக்கை இல்லையென்றாலோ, தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் நல்லது.