சிசேரியன் பிரசவங்கள் கூடுவதற்குத் தனியார் மருத்துவமனைகளின் பணத்தாசை தான் காரணம் என்று பரவலாக நம்பப் படுகிறது. ஆனால், காரணம் என்ன?

Ravishankar Ayyakkannu

சிசேரியன் பிரசவங்கள் கூடுவதற்குத் தனியார் மருத்துவமனைகளின் பணத்தாசை தான் காரணம் என்று பரவலாக நம்பப் படுகிறது. ஆனால், காரணம் என்ன?

image
இணைத்துள்ள படங்களைப் பாருங்கள்.

ஒரு பைசா காசு வாங்காமல் இலவசமாக மருத்துவம் பார்க்கும் அரசு மருத்துவமனைகளிலேயே கூட 42% சிசேரியன் பிரசவங்கள் நிகழ்கின்றன. 2000ஆம் ஆண்டு இது 14% ஆக இருந்துள்ளது. சிசேரியன் செய்தால் அரசுக்குக் கூடுதலாகத் தான் செலவாகும். இருந்தும் ஏன் இதனைச் செய்கிறது?

ஏன் எனில் தாய், சேய் இறப்பு விகிதங்களைக் குறைக்கவே.
image
2000ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 51 (ஆயிரம் குழந்தைகளுக்கு).
2015ஆம் ஆண்டு இதுவே 19ஆக குறைந்துள்ளது.
இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதமோ இதனை விட இரு மடங்கு 37ஆக உள்ளது.

இதனை 2017க்குள் 13ஆக குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.

2000ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தாய் இறப்பு விகிதம் 145 (ஒரு இலட்சம் தாய்களுக்கு)
2015ஆம் ஆண்டு இதுவே 62ஆக குறைந்துள்ளது.
இந்தியாவின் தாய் இறப்பு விகிதமோ இதனை விட மும்மடங்கு 174ஆக உள்ளது.

இதனை 2017க்குள் 44ஆக குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.

இதன் காரணமாகவே தாய்க்கோ சேய்க்கோ ஒரு சிறு ஆபத்து இருந்தாலும் மருத்துவர்கள் சிசேரியனை நாடுகிறார்கள். இந்த ஆபத்து என்பது தாயின் வயது, ஊட்டம், மருத்துவச் சோதனைகளைப் பொருத்து முதலிலேயே தென்படலாம். அல்லது, இறுதி நேர சிக்கல்களாக உருவெடுக்கலாம். இதனைக் கணித்து தேவையான சிகிச்சையைத் தர வேண்டியது மருத்துவர்களின் கடமை.

ஒரு பெரிய மருத்துவமனையில் எல்லா வசதிகளும் சிறப்பு மருத்துவர்களும் 24 மணி நேரமும் இருந்தால் அவர்கள் பொறுத்திருந்து கூட சுகப் பிரசவத்துக்கு முனையலாம். ஆனால், அந்த வசதிகள் இல்லாத சிறு மருத்துவமனைகள் ஒரு சிறு ஆபத்து வந்தாலும் சிசேரியனை நாடவே செய்வார்கள்.

ஒரு இறப்பு நேர்ந்தாலும் மருத்துவர்கள் (தனியார் மருத்துவர்கள் உட்பட)

  • மாவட்ட ஆட்சியர்
  • காவல் துறை வழக்கு
  • நுகர்வோர் நீதிமன்ற வழக்கு
  • மனித உரிமை ஆணையம்
  • மகளிர் ஆணையம்
  • ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டும்.

இவற்றை எல்லாம் தாண்டி மருத்துவரும் மருத்துவமனையும் தாக்கப்படாமல் இருக்க வேண்டும். ஒரு பிரசவம் என்பது பெற்றோர்களுக்கு எவ்வளவு உளைச்சலைத் தரக்கூடியதோ அதை விடக் கூடுதல் உளைச்சலை மருத்துவர்களுக்குத் தரக்கூடியது.

ஒரு பிரசவத்துக்குப் பின் உள்ள மருத்துவ, நடைமுறைச் சிக்கல்களை உணராமல் நாம் அவர்களுக்குக் கொடுக்கும் தொல்லையும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்ற வேண்டிய சூழலும் பல மருத்துவர்களை வேறு படிப்புகளை நாடிச் செல்ல வைக்கிறது.

சுகப் பிரசவம் என்பது ஏதோ கற்பு நிலை என்பதைப் போல் பிடிவாதம் காட்டாதீர்கள். குறிப்பாக, தாய் பிரசவத்துக்குத் தவிக்கும் நேரத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக மாற்றி மாற்றி கொண்டு சென்று சுகப் பிரசவம் தான் வேண்டும் என்று medical shopping செய்து அலைக்கழிக்காதீர்கள்.

உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்ட மனைவியையோ குழந்தையையோ கொன்று விடாதீர்கள்.

மருத்துவர்களை நம்புங்கள்.

மருத்துவர்களுக்குப் பணம் தான் வேண்டும் என்றால் அதை நேர்மையாகச் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.